பட்டினி என்பது கட்சி சார்பற்றது - நாட்டு மக்களின் சுமையைக் குறைத்து பிள்ளைகளுக்கான சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் ஜனாதிபதி ரணில் அழைப்பு
இன்று மேடைகளில் மக்கள் படும் துன்பங்களைப் பற்றிப் பேசுபவர்கள் அன்று பொருளாதாரச் சவாலிலிருந்து தப்பி ஓடிவிட்டனர் ஆனால் நாம் பொறுப்பெற்றதன் பின்னர் இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதார அழுத்தத்தைக் குறைக்க அரசாங்கத்தினால் முடிந்தது. அதனடிப்படையில் நாட்டு மக்களின் சுமையைக் குறைத்து பிள்ளைகளுக்கான சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம் எதிர்கால சந்ததியினருக்காக அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு பெண்கள் அமைப்புகள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘பெண்கள் எமது பலம்’ எனும் தொனிப்பொருளில் கொழும்பு இலங்கை கண்காட்சி மண்டபத்தில் நேற்று (09) நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் - எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பட்டினி என்பது பாகுபாடற்றது எனதெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்களின் சுமையைக் குறைத்து அடுத்த தலைமுறைக்கு வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப உதவுமாறு இலங்கையிலுள்ள அனைத்துப் பெண்களிடமும் கேட்டுக் கொண்டார்.
அன்று உணவு வழங்க முடியாமல், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாமல் இந்நாட்டு தாய்மார்கள் அனுபவித்த துன்பங்களை யாரும் மறந்துவிடக் கூடாது என தெரிவித்த ஜனாதிபதி, இன்று மேடைகளில் தேசப்பற்றையும், மக்களின் துன்பங்களையும் பேசும் தலைவர்கள் சவாலுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஓடியதை இந்த நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
கட்சி வேறுபாடின்றி நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான பெண்கள் அமைப்புக்கள், கட்சி கிளைச் சங்கங்களின் தலைவிகள் மற்றும் பிரதிநிதிகள் என பெருமளவானோர் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மேலும் நெருக்கடியான பொருளாதார நிலைமைகள் இருந்த போதிலும், இந்நாட்டுப் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதை தாம் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை என்று தெரிவித்தார்.
பெண்கள் வலுவூட்டல் சட்டத்திற்கு ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கும் வழங்குவதற்கான சட்டக் கட்டமைப்பை அமைப்பது உட்பட பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
000