பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி மீண்டும் போராட்டம் - பங்களாதேஷில் 3 நாள்கள் பொது விடுமுறை!
பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டில் மீண்டும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.
அதற்கமைய இடம்பெற்ற மோதல் காரணமாக 70 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று நடத்தப்பட்ட போராட்டங்களைக் கலைப்பதற்காக பங்களாதேஷ் காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை நடத்தினர்.
அதேநேரம் நேற்றையதினம் பங்களாதேஷில் மறு அறிவித்தல் வரை, முழுமையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்றுமுதல் 3 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டின் பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
பின்னர் அவர்கள் முன்னெடுத்த போராட்டம் அந்த நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டதுடன், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதனையடுத்து பங்களாதேஷ் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த நிலையில் தற்போது வீதிகளில் இறங்கிப் போராடுபவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அல்ல எனவும் தேசத்தைச் சீர்குலைக்கும் பயங்கரவாதிகள் எனவும் பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000