19 ஆம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது ஏற்பட்ட தவறுகளுக்கு மன்னிப்பு கோருவதாக ஜனாதிபதி ரணில்
2015 ஆம் ஆண்டில் 19ஆம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது ஏற்பட்ட தவறுகளுக்குத் தாம் மன்னிப்பு கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலி பெலிகஹ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதியை நேற்று (19) திறந்து வைத்துக் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்ட வேளையில் கே.என்.சொக்ஸி காலஞ்சென்றிருந்த காரணத்தினால் அந்தப் பணிகளைச் சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் கையளிக்க வேண்டியிருந்தது.
அந்த நேரத்தில் அவரின் தவறு காரணமாகவே தற்போது சிக்கலான நிலைமை உருவாகியுள்ளது.
2015 ஆம் ஆண்டில் நாம் புதிய அரசியலமைப்பு திருத்தத்தைச் சமர்ப்பித்தோம். வழக்கமாக இத்தகைய பணிகள் சட்டத்தரணி கே. என். சொக்ஸிக்கேவிடம் வழங்கப்படும்.
எனினும் அப்போது அவர் உயிருடன் இல்லாத காரணத்தால் அந்தப் பணிகள் சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டன.
அவருக்கு ஒரு வாக்கியத்தை நீக்க முடியவில்லை. அவ்வளவுதான் நடந்திருக்கின்றது. இது அவரது கவனக்குறைவாக இருக்கலாம்.
அந்த தவறுக்கு நாட்டு மக்களிடம் தாம் மன்னிப்பு கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது பற்றித் தொடர்ந்தும் கருத்து கூற வேண்டிய அவசியமில்லை எனவும் இது குறித்து அச்சமடைய வேண்டாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000