சர்வதேச தொழில்நுட்பத் துறை முடங்கலால் ஏற்பட்ட சேவை பாதிப்புகள் வழமைக்கு
உலகளாவிய ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாகப் பாதிப்படைந்த சேவைகள் தற்போது வழமைக்குத் திரும்பி வருகின்றன.
மைக்ரோசொப்ட்டின் மென்பொருளை மேம்பாடு செய்த போது தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதாக க்ரௌட் ஸ்ட்ரைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கான பொறுப்பை ஏற்றுள்ள க்ரௌட் ஸ்ட்ரைக் நிறுவனம், இதனால் பாதிப்படைந்த சகல தரப்பினரிடமும் மன்னிப்பு கோரியுள்ளது.
தற்போது குறித்த தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளதுடன் சகல சேவைகளும் வழமைக்குத் திரும்புவதற்குச் சிறிது காலம் செல்லும் என க்ரௌட் ஸ்ட்ரைக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் ரத்தானதுடன் வங்கிகள், வைத்தியசாலைகள் மற்றும் வணிக நடவடிக்கைகளும் பாதிப்படைந்திருந்தன.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான விமானப் பயணிகள் பல மணிநேரமான விமான நிலையங்களில் காத்திருக்க நேரிட்டது.
இந்த நிலையில் தற்போது சில விமானச் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதுடன் சில விமானச் சேவைகள் இரத்தாகியுள்ளன.
அதேநேரம், உலகளாவிய ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவுகள் இலங்கையிலும் பதிவாகியிருந்தன.
குறிப்பாக இலங்கையில் சில தனியார் வணிக நிறுவனங்கள் இதனால் பாதிப்படைந்திருந்ததுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இணையத்தள பதிவு முறைமையும் தடைப்பட்டிருந்தது.
எனினும் தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000