ஓமான் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பலிலிருந்து இலங்கையர் ஒருவர் உட்பட 9 பேர் மீட்பு
ஓமான் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பலிலிருந்து இலங்கையர் ஒருவர் உட்பட 9 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். எனினும் உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொமொரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஓமானின் ராஸ் மத்ரகாவிலிருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் கடந்த திங்கட்கிழமை கடலில் மூழ்கியது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஓமானின் கடல்சார் பாதுகாப்பு மையம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிக்கையின் படி, அந்தக் கப்பலின் பணிக்குழாமில் 13 இந்தியர்களும், 3 இலங்கையர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கப்பலைக் கண்டுபிடிப்பதற்காகவும், காணாமல்போயுள்ள பணிக்குழாமினரை மீட்பதற்காகவும் கப்பல் ஒன்றையும் விமானம் ஒன்றையும் இந்தியக் கடற்படை அப்பகுதிக்கு அனுப்பியிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் குறித்த கப்பலில் மொத்தமாக 16 பேர் பயணித்திருந்த நிலையில், எஞ்சியவர்களைத் தேடி மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000