தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் இரண்டு பணியாளர்கள் பணியிடைநீக்கம்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிலாவெளி கிளையில் சேவையாற்றும் இரண்டு பணியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் காணொளியை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக நிலாவெளி பகுதியில் நீர் விநியோகம் முறையாக இடம்பெறவில்லை என தெரிவித்து, வாடிக்கையாளர் ஒருவரினால் குறித்த அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும் அதற்கு உரியப் பதில் வழங்கப்படவில்லை எனவும் அதனை வினவியதற்காகத் தாம் தாக்கப்பட்டதாகவும் அந்த வாடிக்கையாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 2 அதிகாரிகளையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்கவுக்கு பணித்துள்ளதாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000