பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்களை, மின்சாரக் கட்டணத் திருத்தத்தினூடாக 20 சதவீதத்தினால் குறைக்க முடியும் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு
அதிகரித்துள்ள பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்களை, மின்சாரக் கட்டணத் திருத்தத்தினூடாக 20 சதவீதத்தினால் குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டணம் அதிகரிக்கும் தினத்தன்று அதிகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணத்தை, அது குறைக்கப்படும் தினத்திலிருந்து குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் வர்த்தகர்களிடம் கோரியுள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிபொருட்களின் விலைகளை பாரியளவில் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இருப்பினும் பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணக் குறைப்பின் பலன் இன்னும் நுகர்வோரைச் சென்றடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, ஒக்டோபர் மாதங்களில் மின் கட்டணத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் பின்னர், ஏப்ரல் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் ஜூலை மாதம் மின் கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000