ஆப்கானிஸ்தானில் கனமழை: 35 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக ஜலாலாபாத் மற்றும் நங்கர்ஹர் மாகாணத்தில் மரங்கள், சுவர்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும் 230 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் துயரத்தில் நாங்கள் பங்கு கொள்கிறோம். இஸ்லாமிய எமிரேட்டின் தொடர்புடைய நிறுவனங்கள் விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருந்துகளை வழங்குவார்கள்,” எனத் தெரிவித்திருந்தனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.