புரட்சி என்பது மக்களைக் கொல்வதோ வீடுகளை எரிப்பதோ அல்ல - ஜனாதிபதி ரணில் வலியுறுத்து
புரட்சி என்பது மக்களைக் கொல்வதோ, விகாரையில் உள்ள பிக்குமாரை சுட்டுக் கொல்வதோ, வீடுகளை எரிப்பதோ அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க, இதை விட வேறு சோசலிசமும் புரட்சியும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மகாவலி எச். மற்றும் ஹுருலுவெவ ஆகிய இரண்டு வலயங்களில் உள்ள 9 மகாவலி பிரிவுகளில் 4,012 பேருக்கு இலவச காணி உறுதிகள் வழங்கப்பட்டன. 47 காணி உறுதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அடையாளமாக வழங்கி வைக்கப்பட்டன.
தம்புத்தேகம மகாவலி விளையாட்டரங்கில் நேற்று (13) நடைபெற்ற உறுமய நிரந்தர காணி உறுதி வழங்கும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
உறுமய வேலைத்திட்டத்தின் மூலம் இந்நாட்டில் 20 இலட்சம் மக்களுக்கு காணி உரிமை கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், மக்கள் இந்த உரிமையைப் பெற்றுக் கொண்டு பெருமையுடன் முன்னேறுமாறு கேட்டுக்கொள்வதாகவும், இதுவே விடுதலை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகாரிகளின் பின்னால் மக்கள் செல்லத் தேவையில்லை என தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் நோக்கமின்றி இந்தத் திட்டத்தைத் தொடருமாறு அனைவரைக்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000