அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு - கொலை முயற்சி என சர்வதேச செய்திகள் தகவல்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேடையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் முகம் சுளித்தபடி, அவரது வலதுபுற காதில் கை வைத்திருப்பதை சம்பவத்தின் காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன. இதேநேரம் டிரம்பின் இந்த பொதுக்கூட்டத்தின் போது பலமுறை துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது.
டிரம்ப் தரப்பிலிருந்து அவர் நலமாக உள்ளதாகவும் உள்ளூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், வெற்றியைத் தீர்மானிக்கும் மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் அமைந்திருக்கும் பட்லர் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றத் தொடங்கிய சில நிமிடங்களுக்கு உள்ளாகவே இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது.
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடனே அவர் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சூழப்பட்டார். அங்கிருந்து உடனடியாக அவரது வாகனத்திற்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டார்.
டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில் இட்டிருந்த பதிவில், தனது வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார். அதற்கு முன்னதாக அவரது செய்தித் தொடர்பாளர், டிரம்ப் “நலமாக இருப்பதாகவும்” உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.
“ஏதோ தவறு இருப்பதாக நான் உடனடியாக அறிந்தேன். அப்போது உச்ச ஸ்துதியில் விசில் போன்ற சத்தமும் துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக தோட்டா ஒன்று என் தோலைக் கிழித்துச் சென்றதை உணர்ந்தேன்,” என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ரத்தப்போக்கு அதிகமாவதைக் கண்டவுடன், என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துவிட்டேன்,” என்றும் எழுதியுள்ளார்.
இதேவேளை “இந்தத் தாக்குதலை நடத்திய ஆண் துப்பாக்கி ஏந்தியிருந்ததாகவும், மைதானத்திற்கு வெளியே சில நூறு மீட்டர் தொலைவிலுள்ள உயரமான அமைப்பிலிருந்து சுட்டதாகவும்” தெரிவிக்கப்படுகின்றது. அதோடு, இந்தத் தாக்குதல் ஒரு படுகொலை முயற்சியாகவே கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் சம்பவ இடத்திலேயே அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது
அதோடு, “துப்பாக்கிச் சூட்டில் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்த பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும்” தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை படுகாயமடைந்த இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ஆல்லிஜெனி பொது மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியப் பிரதமர் மோதி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமெரிக்காவின் ரகசிய சேவை முகமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொதுக்கூட்டம் நடந்த பகுதிக்கு வெளியே, தாக்குதல் நடத்திய நபர் ஓர் உயரமான இடத்திலிருந்து பிரசார மேடையை நோக்கிப் பலமுறை சுட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுபவர் பார்வையாளர்களில் ஒருவரைக் கொன்றதாகவும் மேலும் இருவரை மோசமாகக் காயப்படுத்தியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரை ரகசிய சேவை ஏஜென்டுகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளனர்..
இதேவேளை இந்தத் தாக்குதலில் டிரம்ப் பெரிய அளவில் காயமடையவில்லை, நலமாக இருக்கிறார் என்பதைக் கேட்டு ஆறுதல் அடைந்ததாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
"அவருக்காகவும், அவரது குடும்பத்தினருக்காகவும், இந்தக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்" என்று ஹாரிஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
"இதுபோன்ற வன்முறைக்கு நம் நாட்டில் இடமில்லை. இந்த வெறுக்கத்தக்க செயலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும். இது மேலும் வன்முறைக்கு வழிவகுக்காமல் இருக்க நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
இதனிடையே டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"என் தந்தைக்காகவும், பென்சில்வேனியாவின் பட்லரில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் நீங்கள் காட்டிய அன்பு மற்றும் செய்த பிரார்த்தனைகளுக்கு நன்றி" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
"விரைவாகவும் உறுதியாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்ட ரகசிய சேவை மற்றும் பிற சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டிற்காக நான் தொடர்ந்து பிரார்த்திக்கிறேன். அப்பா! இன்றும் எப்போதும் உங்களை நேசிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிரம்ப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்பதை அறிந்து நிம்மதி அடைந்ததாக” தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை என்று தெரிவித்த பைடன், “நாம் ஒரு தேசமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்தச் சம்பவத்தை நாம் கண்டிக்க வேண்டும்,” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டொனால்ட் டிரம்புடன் அதிபர் ஜோ பைடன் பேசியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால், இருவரும் என்ன பேசினார்கள் என்பதை வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவிக்கவில்லை.
ஜோ பைடன் பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ, பட்லர் நகரத்தின் மேயர் பாப் டாண்டோய் ஆகியோருடனும் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் டிரம்பின் செய்தித் தொடர்பாளர் குக்லீல்மிதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000