கொலை அச்சுறுத்தல் விடுத்தாலும் பாதாள உலகக் கும்பல் அழிக்கப்படும் - பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை
பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை கொல்லப்போவதாக தகவல் பரப்பி, அச்சுறுத்தல் விடுத்து பெயர் பட்டியல்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பயமுறுத்த முயற்சிகளை மேற்கொண்டாலும், எதிரான நடவடிக்கைகளை நிறுத்த பொலிஸார் தயாராக இல்லை என பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த யுத்தத்தின் போது பயங்கரவாத அச்சுறுத்தல்களை அச்சமின்றி எதிர்கொண்டது போன்று போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பதற்காக உயிரை தியாகம் செய்யக்கூடிய ஆயிரக்கணக்கான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருப்பதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்தளம் வானாதவில்லு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய எரியூட்டியின் மூலம் 881 கிராம் 355 கிலோகிராம் கொக்கேய்னை அழிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“யுக்திய இரண்டாம் கட்ட நடவடிக்கை” இல் சட்டவிரோத துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்வது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என தெரிவித்த அவர், டிசம்பர் மாதம்முதல் இதுவரை 296 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதாள உலகம் என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலும் போதைப்பொருள் கடத்தலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் எனவும், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பாரிய சொத்துக்களால் இந்த குற்றவாளிகளுக்கு உணவளிக்கப்படுவதால், கைது செய்வதற்கு மக்களின் ஆதரவு தேவை எனவும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது