வடக்கில் உள்ள மக்கள் அரச சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர் - மனுஷ நாணயக்கார புகழாரம்
வடக்கில் உள்ள மக்கள் அரச சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார புகழாரம் சூட்டியுள்ளார்.
கிளிநொச்சியில் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்
,
இன்று நாடு பாரிய ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு வரும் நிலையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் சம்பள அதிகரிப்பு கோரி புாராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாட்டின் பொருளாதார நிலை தெரியாது இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் சந்திப்பொன்றின் போது இவ்விடயம் வடக்கில் எவ்வாறு உள்ளது என்று அரசாங்க அதிபரிடம் வினவினேன். வடக்கில் பெரியளவில் அவ்வாறான நிலை இல்லை. சில போராட்டங்கள் நடைபெறுகின்றது. அண்மையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் அவர் எனக்கு தெரிவித்தார்.
உண்மையில் வடக்கில் உள்ள மக்கள் வித்தியாசமாக சிந்திக்கின்றார்கள். தமக்கு கிடைக்க வேண்டிய அரச சேவைகள் தொடர்பில் வழிப்புடன் நடந்து கொள்கின்றார்கள். தமக்கு கிடைக்க வேண்டிய சேவைகளை தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக அறிந்து கொள்வதுடன், அந்த விடயம் தொடர்பில் மாற்று சிந்தனையுடன் செயற்படுகின்றார்கள்.
இதேநேரம் புகையிரத சேவை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டம் நடைபெற்றால் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என்றதும் மீண்டும் சேவையில் இணைந்து கொண்டனர். அவர்கள் தமது வேலை போய்விடும் என்றே மீண்டும் இணைந்தனர்.
நாட்டின் பொருளாதாரம் பாதாளத்திலிருந்து மீண்டு வரும் நிலையில் அரச உத்தியோகத்தர்களும் உணர்ந்து செயற்பட வேண்டும். பொது மக்கள் வடக்கில் விழிப்பாக செயற்படுவது போன்று நாடு முழுவதும் உள்ள மக்கள் விழிப்பாக செயற்பட வேண்டும். தமக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் கிடைக்கின்றனவா என மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
நாடு அதாள பாதாளத்தில் இருந்த போது, வெளிநாடுகளிலிருந்து நாட்டை மீட்க வேலைவாய்ப்புக்களை பெற்று சென்ற மக்களே செயற்பட்டனர். அவர்கள் உண்டியல் மூலமாக பணத்தை அனுப்பாது நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு டொலர்களாக அனுப்பினர். இன்று அவர்களின் பெரும்பான்மையான பங்களிப்பாலேயே நாடு நிமிர்ந்து வருகின்றது.
இதேநேரம் கிளிநொச்சி மாவட்டம் 80 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தினியான நிர்வாக மாவட்டமாக யாழ்ப்பாணத்திலிருந்து பிரிந்தது. துர்ப்பாக்கியமாக இந்த மாவட்டம் பிரிந்த காலப்பகுதியிலேயே யுத்தமும் ஆரம்பமானது. அதனால் இந்த மாவட்டத்திற்கு தேவையான அபிவிருத்திகளை முன்னெடுக்க முடிந்திருக்கவில்லை. யுத்தம் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்ட மக்களும் இங்கு உள்ள மக்களே.
வடக்கில் உள்ள மக்கள் அனைத்து இனங்களையும் மதித்து புரிந்துணர்வுடன் நடந்து கொண்டார்கள். தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்தில் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சகோதர இனத்தவரின் மரணச்சடங்கை இங்கேயே செய்ய வேண்டும் என வேண்டுகை விடுக்குமளவிற்கு சமரசங்களும், ஒற்றுமையும் இருந்தது.
தந்தை செல்வாவிற்கு பின்னர் அந்த மாவட்ட அரசாங்க அதிபருக்கு திரண்ட மக்களே அதிகம் என்கின்றார்கள். அன்று எவ்வாறு மக்கள் இன மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்தார்களோ அதே போன்று வாழக்கூடிய மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டும். நாங்கள் ஒற்றுமையாக இருந்தாலே இலக்கை வெல்ல முடியும் எனவும் அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000