ரஷ்ய ராணுவத்தில் ஏமாற்றிச் சேர்க்கப்பட்ட இந்தியர்களை விடுவிக்க உறுதியளித்தது ரஷ்ய அரசு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது ரஷ்யப் பயணத்தின் போது, ரஷ்ய விளாடிமிர் புதினிடம் இந்தப் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினார். மோடியின் ரஷ்யப் பயணம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்ய ராணுவத்தில் போர் சாராத வேலைகள் வழங்கப்படும் என்ற பெயரில் இந்தியர்கள் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் யுக்ரேனுக்கு எதிரான தீவிரப் போரில் அவர்கள் தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படிச் சிக்கிக்கொண்ட இந்தியர்களை விடுவிக்க மத்திய அரசு முயன்று வருகிறது.
கடந்த செவ்வாயன்று (ஜூலை 9) நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ரா, "ரஷ்ய ராணுவத்தின் சேவையில் தவறாக வழிநடத்தப்பட்டு, சேர்க்கப்பட்ட இந்தியர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பிரதமர் மோடி வலுவாக குரல் எழுப்பினார்," என்று கூறினார்.
ரஷ்ய ராணுவத்தில் உள்ள அனைத்து இந்தியர்களையும் விரைவில் விடுவிப்பதாக ரஷ்ய தரப்பும் உறுதியளித்ததுள்ளதாக வினய் குவாத்ரா கூறினார்.
ரஷ்யப் படைகளில் சுமார் 35-50 இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்களில் 10 பேர் ஏற்கனவே இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும், எஞ்சியுள்ள இந்தியர்களை அழைத்துச் வர இரு நாடுகளும் இப்போது இணைந்து செயல்படும் என்றார். அதிக சம்பளம் மற்றும் ரஷ்யக் குடியுரிமை கிடைக்கும் எனக்கூறி முகவர்கள் தங்களை ஏமாற்றியதாக ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்தியர்கள் கூறுகின்றனர்.