2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைச் சான்றளிக்கும் பணி இன்னும் சில நாள்களில் நிறைவடையும் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைச் சான்றளிக்கும் பணி இன்னும் சில நாட்களில் நிறைவடையும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் - ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் விளக்கமளிக்கப்படும் வரையில் ஜனாதிபதி தேர்தலைப் பிற்போடுமாறு கோரியுள்ள வழக்கில் இடையீட்டு மனுதாரர் தரப்பு சார்பில் தாம் முன்னிலையாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
6 வருடங்களாக இருந்த நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் பதவிக்காலம் அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தில் 5 வருடங்களாகக் குறைக்கப்பட்டது.
மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலப்பகுதியிலேயே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. எனவே அதற்கு முன்னதாகவே பதவியேற்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவரது பதவிக்காலம் குறித்து நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தார்.
இதன்போது, முன்னிலையான சட்டமா அதிபர் தற்போதைய ஜனாதிபதியின் (மைத்ரிபால சிறிசேன) பதவிக்காலம் 6 வருடங்கள் எனவும் அதன் பின்னர் வருபவர்களின் பதவிக்காலம் 5 வருடங்கள் எனவும் வாதங்களை முன்வைத்தார்.
இருப்பினும் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதை உயர் நீதிமன்றம் பதிவுசெய்திருந்தது.
தற்போது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனு தொடர்பில் எத்தகைய தீர்ப்பு வழங்கப்படும் அல்லது வழங்கப்பட வேண்டும் என்பது பற்றிக் கூற முடியாது.
இந்தநிலையில், இந்த மனு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் நிலையில், அதன் இடையீட்டு மனுதாரர் தரப்பு தம்மை முன்னிலையாகுமாறு கோரியிருப்பதாகவும் அதன்படி தாமும் முன்னிலையாகவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
000