T20 தரவரிசையில் ஹர்திக் பாண்டியா முதலிடம்
ஐசிசி T20 சகலதுறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
இதன் மூலம் T20 சகலதுறை வீரர்கள் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார்.
ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 9 ஆவது அத்தியாயம் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்றது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
இந்த நிலையில், ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்ததை அடுத்து T20 வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது.
அதன்படி, ஐசிசி T20 சகலதுறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் உதவித் தலைவர் ஹர்திக் பாண்டியா முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நடைபெற்று முடிந்த T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரு துறைகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா, இந்திய அணி இம்முறை சம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
அதுமட்டுமின்றி இந்தாண்டு T20 உலகக் கிண்ணத் தொடரில் துடுப்பாட்டத்தில் 144 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம், இந்திய அணிக்காக T20 உலகக் கிண்ணத் தொடரில் 100 இற்கும் மேற்பட்ட ஓட்டங்கள் மற்றும் 10 இற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் சகலதுறை வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.
இதன் காரணமாக அவர் தற்போது சகலதுறை வீரர்கள் தரவரிசையிலும் முதலிடம் பிடித்து சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது