அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர்- 8 சுற்றில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் ரோஹித் சர்மா 92 ஓட்டங்களைப் பெற்றார்.
8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் மிச்சல் ஸ்டார்க் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
206 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் ட்ரவிஸ் ஹெட் அதிகபட்சமாக 76 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுக்களையும் குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000