பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான்!
ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர்- 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 43 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ரிஷாட் ஹொசைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதன்படி பங்களாதேஷ் அணிக்கு 116 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தநிலையில், 116 என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பங்களாதேஷ் அணி துடுப்பாடிய சந்தர்ப்பத்தில் இடைக்கிடையே மழை குறுக்கிட்டது.
இதனால் பங்களாதேஷ் அணிக்கு டக்வத் லூயிஸ் முறையின் மூலம் 19 ஓவர்களில் 114 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது
வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 17.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியைத் தழுவியது.
லிட்டன் தாஸ் அணி சார்பாக ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷித் கான் மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றுள்ளது
அதேநேரம், அவுஸ்திரேலிய அணி இந்த ஆண்டு உலக கிண்ணத் தொடரில் அரையிறுதிக்கு தகுதிப்பெறாமல் வெளியேற்றப்பட்டுள்ளது.
இம்மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000