மீண்டும் டிரெண்டிங்கில் மணிப்பூர்
மணிப்பூரில் கலவரம் வெடித்து ஓராண்டுக்கு மேலாகும் சூழலில், மீண்டும் மணிப்பூர் இணையத்தின் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
காசாவின் ஹமாஸ் படையினரை குறிவைத்து இஸ்ரேல் கடும் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. தற்போது ரஃபா பிராந்தியத்தில் தாக்குதல் தொடுத்து வரும் இஸ்ரேல், பலவகையிலும் சர்வதேச அதிருப்தியை பெற்று வருகிறது. ஹமாஸ் குழுவினருக்கு பதிலாக அப்பாவிகளை கொத்துக்கொத்தாக குண்டு வீச்சில் இஸ்ரேல் கொன்று வருவதே இதற்கு காரணம். முகாம்களில் அடைக்கலமான அப்பாவிகள், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என போருக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் தாக்குதலில் அதிகம் கொல்லப்பட்டு வருகின்றனர்.
ரஃபா மீதான இஸ்ரேலின் கோரத் தாக்குதலை கண்டிக்கும் வகையில் ’ஆல் ஐஸ் ஆன் ரஃபா’ (All eyes on Rafah) என்ற முழக்கம் சமூக ஊடகங்களில் தீயென பரவியது. சர்வதேசளவிலான சமூக ஊடக பிரபலங்கள் இதனை முன்னெடுத்ததில், இந்த ஆண்டின் முன்னணி சமூக ஊடக முழக்கங்களில் ஒன்றானது. இந்தியாவிலும் பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் ’ஆல் ஐஸ் ஆன் ரஃபா’ ஹேஸ்டேக் பிரபலமானது. இதன் மூலம் பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடுமைகள் உலகளவில் கவனம் பெற்றன. தங்கள் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பல்வேறு தேசங்களும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவையும், இஸ்ரேலுக்கு கண்டனத்தையும் அதிகாரபூர்வமாக தெரிவித்து வருகின்றன.
இதனையடுத்து ’ஆல் ஐஸ் ஆன்’ என்ற வைரல் முழக்கம், ரஃபா மட்டுமன்றி, அப்பாவி மக்களுக்கு எதிரான அவலம் அரங்கேறு இடங்கள் அனைத்தையும் தாங்கி வைரலாக ஆரம்பித்தன. காங்கோ இந்த வகையில் இடம் பிடித்தது. இவற்றுக்கு மத்தியில் இந்தியாவின் மணிப்பூரை முன்வைத்து, ’பட் நோ ஐஸ் ஆன் மணிப்பூர்’(But No Eyes on Manipur) என்ற முழக்கம் எழுந்தது. இந்திய பிரபலங்கள், உலகின் எந்த மூலையிலோ இருக்கும் ரஃபா, காங்கோ போன்றவைக்காக கவலைப்படும்போது, சொந்த நாட்டில் ஓராண்டுக்கும் மேலாக துயரத்தில் ஆழ்ந்திருக்கும் மணிப்பை கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம் இந்த முழக்கம் வாயிலாக வெடித்துள்ளது.
மெய்தி - குக்கி இன மக்களிடையே ஓராண்டுக்கு முன்னர் மணிப்பூரில் வெடித்த மோதல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதில் குக்கி தரப்பில் பெருத்த சேதம் எழுந்ததோடு, இன்னமும் இயல்புக்கு திரும்ப இயலாது இருதரப்பு மக்களும் தவித்து வருகின்றனர். சின்னஞ்சிறு மாநிலத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதோடு, சுமார் 50,000 மக்கள் வீடு, பிழைப்பு ஆகியவற்றை இழந்து முகாம்களில் தவித்து வருகின்றனர். குக்கி - மெய்தி தம்பதியர் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் உட்பட அரசின் பாராமுகம் மணிப்பூரை தவிப்புக்கு ஆளாக்கி உள்ளது.
இந்த சூழலில் இயற்கையின் கோரமாக கனமழை மற்றும் வெள்ளம் என உயிர்ப்பலிகள் அதிகரிக்கும் வகையில், மணிப்பூர் தவித்து வருகிறது. வன்முறை மோதல்களுக்கு ஈடாக இயற்கைச் சீற்றத்தின்போது சகோதர இந்தியர்களிடம் இருந்து உதவும் கரங்கள் நீளாது மணிப்பூர் மக்கள் தடுமாறி வருகின்றனர். உலகின் ஏதோவொரு மூலையில் புதிதுபுதிதாய் நடந்தேறும் அவலங்களுக்கு எதிராக பொங்கும் இந்தியப் பிரபலங்கள், ஓராண்டுக்கும் மேலாக தடுமாறித் தவிக்கும் மணிப்பூரை திரும்பிப் பார்க்காதது ஏன் என்னும் பரிதவிப்பை வெளிப்படுத்தும் வகையில் ’பட் நோ ஐஸ் ஆன் மணிப்பூர்’ என்ற முழக்கம் சமூக ஊடக பதிவுகளில் டிரெண்டிங்கில் இன்று இடம் பிடித்துள்ளது.