பொலிஸ் திணைக்களத்தின் வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தம்
2025 ஆம் ஆண்டு தொடர்பான பொலிஸ் திணைக்களத்தின் வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இது தொடர்பான உத்தரவை கடந்த செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி நடைமுறைப்படுத்தப்படவிருந்த 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை அமுல்படுத்தும் திகதி அவ்வருடம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை கட்டாயக் காரணங்களுக்காக அன்றைய தினத்திற்கு முன்னர் நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள் இருந்தால், மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூலம் அறிக்கை தயாரித்து பிரதி பொலிஸ் மா அதிபர் மனிதவள முகாமைத்துவ மற்றும் சர்வதேச உறவுகள் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கடமைத் தேவைகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
000