குஜராத் தீ விபத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு
இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள ராஜ்கோட் நகரில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக இதுவரையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விளையாட்டு அரங்கின் உரிமையாளர் உட்பட 3 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள சிறார் விளையாட்டு பொழுதுபோக்கு மையத்தில் நேற்று திடீர் என தீவிபத்து ஏற்பட்டது.இதில் உயிரிழந்தோர் எண்னிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
கோடை கால விடுமுறை என்பதால் அந்த மையத்தில் நேற்று அதிகளவான சிறுவர், சிறுமியர் வருகை தந்திருந்தார்கள். நேற்று மாலையில் விளையாட்டு மையத்தின் தரைத்தளத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்றிருந்த குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் நிலைமைகளை ஆராய்ந்திருந்தார். இந்நிலையில், ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாவவும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவும் வழங்கவுள்ளதாக குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். இந்நிலையில், தீ விபத்து நடந்த விளையாட்டு வளாகம், அரசின் தீயணைப்பு அனுமதிக்கான தடையில்லா சான்று பெறப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.