வைகோ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
நாகர்கோவிலில் மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பதாக இருந்தது. ஆனால், இன்று வைகோ திருமண விழாவிற்கு வரவில்லை. வைகோவிற்கு பதிலாக அவரது மகனும் மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ பங்கேற்றார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்ததில் வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் பெறுவார் என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார். மேலும் வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வைகோ வீட்டில் தவறி விழுந்ததாகவும், இதில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் உடனடியாக சென்னை சென்று விட்டதாகவும் அவரது மகன் துரை வைகோ கூறியுள்ளார். மேலும் அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துரை வைகோ வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:-
மதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேல் அவர்களின் மகள் மணவிழாவில் பங்கேற்பதற்காக இயக்கத்தந்தை தலைவர் வைகோ அவர்கள் நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்கள். எதிர்பாரா விதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் உடல் நலம் பெறுவார்கள். வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.