தைவானை அச்சுறுத்தும் சீனா - புதிய ஜனாதிபதி பதவியேற்பதற்கு முன் எல்லை மீறிய போர் விமானங்கள்
சீனாவின் சுமார் 45 போர் விமானங்கள், தைவான் எல்லையை மீறி அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தைவானின் புதிய ஜனாதிபதி பதவியேற்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சீனாவின் அத்துமீறலை தைவான் கண்டித்துள்ளது.
இது குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நேற்று (14.05.2024) சுமார் 25 சீன போர் விமானங்கள் உள்ளிட்ட ஆளில்லா விமானங்கள் தைவான் எல்லையை மீறி இரண்டு மணி நேர இடைவெளியில் பறந்தன.
தைவான் மீது இராணுவ அழுத்தத்தை அதிகரிப்பதற்கான அதன் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, சீனா தைவானைச் சுற்றி போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி வருகின்றது.
கடந்த செப்டம்பரில் தைவானைச் சுற்றி மிகப் பெரிய அளவில் 103 போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை அனுப்பியது. இவற்றில் 40 விமானங்கள் எல்லையைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்று முன்தினம் (13.05.2024) மூன்று சீன போர் கப்பல்கள் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் பிரவேசித்து மூன்று மணி நேரம் பயணித்ததாக தைவான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கை கடல் பாதுகாப்பைத் தீவிரமாகப் பாதிப்பதாகவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் தைவான் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
"சீன தரப்பு சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், இந்த பகுத்தறிவற்ற நடத்தையை உடனடியாக நிறுத்துமாறும்” தைவான் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000