மோசடியான பட்டப்படிப்பு நிறுவனங்கள் தொடர்பில் துரித நடவடிக்கை
கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்ட மாற்றமொன்றை மக்கள் கோருவதாகவும், தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களான, ஆசிய ஆசிரியர் அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி பிரிவு ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை இல்லாமலாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், அதை தமது தொழிலையும் தாண்டிய ஒரு தேசியப் பொறுப்பாகக் கருதி செயற்படுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
கன்னங்கரா அவர்களின் கல்விச் சீர்திருத்தங்களினால் ஏற்பட்ட கல்விப் புரட்சிக்கு அப்பால் விரிவான கல்வி மாற்றமொன்று தேவைப்படுவதாகவும் தேசிய கல்வி முகாமைத்துவ முறைமையின் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய பிரதமர், எதிர்கால சந்ததியினரை அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய நவீன தொழிநுட்ப உலகிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதேநேரம் மோசடியான பட்டப்படிப்பு நிறுவனங்களிடமிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்தல், அதற்கான சட்டக் கட்டமைப்பு மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000