சேவையில் ஈடுபடாத பேருந்துக்கு யாழில் முற்பதிவு – பண மோசடி கும்பல் குறித்து விழிப்பாக இருக்க கோரிக்கை!
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்வதற்காக இணையத்தளமொன்றில் ஊடாக பேருந்தை முன்பதிவு செய்தவர் பணத்தை இழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
தெல்லிப்பழையை சேர்ந்த நபரொருவர் கொழும்பில் நடைபெறும் போட்டிப் பரீட்சையொன்றுக்கு செல்வதற்காக பேருந்து முற்பதிவு செய்யும் இணையத்தளமொன்றின் ஊடாக இரு ஆசனங்களுக்காக 4600 ரூபாய் பணத்தை வங்கி அட்டை ஊடாக செலுத்தி ஆசனங்களை முற்பதிவு செய்துள்ளார்.
முற்பதிவு செய்தவருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் ஊடாக பதிவு செய்ததை உறுதிப்படுத்தும் செய்தி அனுப்பபட்டுள்ளது.
இதனை நம்பி கொழும்பு செல்வதற்காக நேற்று ( 21) இரவு குறித்த நபர் தெல்லிப்பழை சந்தியில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் பேருந்து வராத நிலையில் இணையத்தில் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் தனியார் பேருந்துகள் தரித்து நிற்கும் யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு சென்று பார்த்த போதும் முற்பதிவு செய்த பேருந்தை காணவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குறித்த நபர் வேறொரு பேருந்து மூலம் கொழும்புக்கான பயணத்தை தொடர்ந்தார்.
இதன்போது குறித்த பேருந்து நடத்துனரிடம் விசாரித்தபோதே தான் முற்பதிவு செய்த பெயரில் பேருந்தே சேவையில் ஈடுபடுவதில்லை என்பதை அறிந்து தான் ஏமாறியதை உணர்ந்துள்ளார்.
இணையத்தளம் ஊடாக வங்கி அட்டைகளை பயன்படுத்தி பல வகையில் மோசடி இடம்பெறும் நிலையில் சேவையில் ஈடுபடாத பேருந்துக்கு கட்டணம் அறிவிடும் மோசடியும் அரங்கேறுகிறது.