போலி துவாராகா தொடர்பில் உருத்ரகுமாரன் வெளியிட்ட அறிக்கை
மாவீரர் தினமான நவம்பர் மாதம் 27ஆம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பேசியதாக காணொளி ஒன்று வெளியானது. அதில் உள்ள பெண் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் அல்ல என நாடு கடந்த தமிழீழ அரசு தெரிவித்துள்ளது.
நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமார் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
துவாரகா வீடியோவில் நம்பகத்தன்மை இல்லை, அவர் பேசியதாக வெளியான வீடியோவை முழுமையாக புறக்கணிக்கிறோம். கிடைக்கப் பெற்ற நம்பகமான தகவல் மற்றும் எங்களின் ஆய்வு அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளோம். பிரபாகரனின் குடும்ப உறுப்பினர் எனக் கூறி இல்லாத ஒருவரை காட்டுவது வேதனை தருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும், அவர் குடும்பத்தினரையும் உலகத் தமிழ் மக்கள் தங்களின் இதயங்களில் அன்போடும், மதிப்போடும் வைத்திருக்கிறார்கள். பொதுவெளியிலும், பொதுத்தளத்திலும் தமிழ்மக்கள் இவ்விடயத்தினை நிராகரித்திருந்தமை நம்பிக்கையினை தந்துள்ளதோடு, தகுந்த பதிலடியாகவும் அமைந்துள்ளது.
இதேவேளை இவ்விவகாரத்தினை பேசுபொருளாக கொண்டு கையாளுகின்ற சமூக ஊடகங்களை பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறும் வேண்டுகின்றோம். ' விழிப்பே அரசியலின் முதற்படி' என்ற தமிழீழத் தேசியத் தலைவரது வாக்கை நாம் அனைவரும் நினைவிருத்தி, தொடர்ந்தும் விழிப்புடன் செயற்படுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.