கொரோனாவை வீழ்த்த அள்ளிக்கொடுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை, உயிர்காக்கும் ஆக்சிஜன் தேவை போன்றவற்றுக்காக தற்போது பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது மீண்டும் அதிகரித்திருக்கிறது.
இந்த சேவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் மூலம் புத்துயிர் பெற்றிருப்பது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் 30 லட்ச ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினார்.
அவரைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் பிரபல முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான பிரெட் லீ 40 லட்ச ரூபாயை வழங்கியிருக்கிறார்.
இருவரும் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிவிட்டு வெறுமனே ஒதுங்கிக் கொள்ளவில்லை. “இந்திய மக்கள் எங்கள் மீது காட்டிய அன்பும் பாசமும் சிறப்பானது. அப்படிப்பட்டவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த கடினமான சூழலில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தேவைப்படுபவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய உறுதி கொள்வோம்” என்று உருக்கமாக கேட்டுக்கொண்டும் இருக்கின்றனர்.
இந்த இருவரின் கருணை உள்ளமும் இந்திய மக்களை நெகிழ வைப்பதாக இருக்கிறது. அத்துடன் கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் இணைவோம் என்ற செய்தியை கூறியிருப்பதன் மூலம் மற்றவர்களும் நன்கொடை அளிப்பதில் தாராளம் காட்ட வேண்டுமென்பதை சூசகமாக சுட்டிக் காண்பித்தும் இருக்கின்றனர்.
இவர்களின் இந்த நிதி உதவி விளையாட்டு வீரர்களையும் கடந்து, அனைத்து தரப்பினரையும் சிந்திக்க வைத்துள்ளது.
“கடந்த ஆண்டே நாங்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏராளமான பணத்தை வாரி வழங்கினோமே மீண்டும் தர வேண்டுமா?” என்று யோசிக்காமல் 2-வது முறையாக நன்கொடை வழங்குவதில் எந்த தவறும் இல்லை.
இதுவரை இந்திய பிரபலங்கள் யாரும், கொரோனா நோயாளிகளுக்காக பெரிய அளவில் நன்கொடை அளிக்க முன்வராதது, ‘எங்கள் மனதில் இடமிருக்கிறது, கைகளில்தான் எதுவும் இல்லை’ என்பதுபோல் விலகி நின்று வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரிய விஷயம்.