பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 55 சதவீதம் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்
எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 55 சதவீதம் குறைக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோன்டெர் லேயன் கூறுகையில், ‘எதிர்வரும் 2050ஆம் ஆண்டுக்குள் காற்றிலிருந்து அகற்றப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவுக்கும் காற்றில் கலக்கப்படும் அந்த வகை வாயுக்களின் அளவுக்கும் இடையே வேறுபாடில்லாமல் செய்வதற்கான எங்களது வாக்குறுதி, தற்போது சட்டப்பூர்வமாகியுள்ளது.
இந்த இலக்கை எட்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளன.
முதல்கட்டமாக, எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் காற்றில் பசுமைக்குடில் வாயுக்களின் அளவை கடந்த 1990ஆம் ஆண்டில் இருந்ததைவிட 55 சதவீதம் குறைப்பதற்கும் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன’ என கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் சுமார் 40 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச பருவநிலை மாநாடு எதிர்வரும் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.