புதிய இயந்திரத்தைக் கண்டுபிடித்த அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்
மனிதனின் உடலில் பாக்டீரியா தொற்று காரணமாக, நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. பாக்டீரியா தொற்றுக்கு எதிராக செயல்படக்கூடிய ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சரியான நேரத்தில் சரியான அளவில் பயன்படுத்துவது என்பது முக்கியமானதாகும்.
மனிதனுக்கு அளிக்கப்படும் ஆன்டிபயாட்டிக் (நுண்ணுயிர் எதிர்ப்பு) மருந்துகள் பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படுகிறது என்பதை கண்டறிவது மிகவும் சவாலான ஒன்றாகவே இருந்து வருகிறது. மனித உடலில் பாக்டீரியா நோய் தாக்கத்தின் பாதிப்பை ஆர்டி-பிசிஆர் (RT-PCR) போன்ற சோதனைகளின் மூலம் கண்டறிந்தாலும், அவற்றை கண்டறிவதற்கான நாட்கள் அதிகமாகிறது.
எப்போது ஆன்டிபயாட்டிக் கொடுக்க வேண்டும்:
இதனால் நோய் தொற்று பாதிப்பு உடலில் அதிகமாகிறது. எனவே, பாக்டீரியா நோய் தொற்றுக்கு அளிக்கப்படும் ஆன்டிபயோடிக் மருந்துகளை விரைந்து அளிக்கும் வகையில், ஆன்டிபயோகிராம் என்கிற புதிய சோதனை கருவியை கண்டுபிடித்து, அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளனர், அண்ணா பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துறையின் பேராசிரியர் கே. சங்கரன் மற்றும் குழுவினர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பாக்டீரியா வளர்ச்சி அடையும் போது பாக்டீரியாவில் இருந்து ஒரு காம்பவுன்ட் வெளியில் வரும். அந்த காம்பவுண்டானது ஃபுளாரசென்ஸ் (Fluorescence) காம்பவுண்ட் உடன் பின்னும். அவ்வாறு பின்னும் போது ஃபுளாரசென்ஸ் காம்பவுண்ட் தனது தன்மையை இழந்து விடும். ஆன்டிபயாட்டிக் ஆக்டிவாக இருந்தால் நோய் தொற்று பாதிப்பை எதிர்க்கும்."
ஆன்டிபயோகிராம் எதற்கு?
"மருத்துவர்களால் தற்போது 25 ஆன்டிபயாட்டிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மருத்துவர்களும் ஒரு ஆன்டிபயாட்டிக்களை அளிப்பார்கள். ‘ஆன்டிபயோகிராம்’ சோதனை கருவியில் எந்த ஆன்டிபயாட்டிக்கை பயன்படுத்தலாம் என்பதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும். ஏற்கனவே உள்ள கருவிகள் வாயிலாக சரியான ஆன்டிபயாட்டிக்கைத் தேர்வு செய்ய இரண்டு முதல் மூன்று நாள்கள் வரைத் தேவைப்படும்," என்கிறார் பேராசிரியர் சங்கரன்.
ஆனால், தான் கண்டுபிடித்திருக்கும் இந்த 'ஆன்டிபயோகிராம்' கருவியின் வாயிலாக உடலில் ஏற்பட்டுள்ள பாக்டீரியா தொற்றிற்கு ஏற்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகளை நம்மால் கண்டறிய முடியும். அதுவும் சோதனை செய்யப்பட்டு ஆறு மணி நேரத்திற்குள்ளாக முடிவுகள் துல்லியமாகத் தெரியவரும் என்பதால், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருந்துகளைக் கொடுத்து, அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும். ஏற்கனவே ஒருவருக்கு கொடுக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக் வேலை செய்யவில்லை என்றால், சரியான ஆன்டிபயாட்டிக்கைத் தேர்வு செய்து சிகிச்சை அளிக்க முடியும்.
ஏற்கனவே, கண்டறியப்பட்ட சோதனை கருவிகள் அதிக எடையோடும் நிபுணர்களால் மட்டுமே இயக்கக்கூடிய அளவிற்கு இருந்தது. ஆன்டிபயோகிராம் கருவி நிபுணத்துவம் இல்லாதவர்களும் சோதனை செய்யும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்பே இவை கண்டறியப்பட்டாலும், இரண்டு காப்புரிமைகள் தற்போது தான் கிடைத்துள்ளன. மேலும், இதுவரை 30,000 மேற்பட்டவர்களின் மாதிரிகளை இந்த சோதனை கருவியின் வாயிலாக செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆன்டிபயோகிராம் கருவியின் விலை ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே இருப்பதால் குறைந்த விலையில் வாங்கி, நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்கமுடியும் என்று அண்ணாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.