ராமேசுவரம் கோவில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியை தாண்டியது
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் திறந்து நேற்று எண்ணப்பட்டது. கோவிலில் உள்ள அனைத்து உண்டியல்களும் நேற்று திறக்கப்பட்டு அந்த உண்டியலில் இருந்த அனைத்து ரூபாய் நோட்டு மற்றும் சில்லரை காசுகளும் கோவிலின் திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அங்கு கோவில் இணை ஆணையர் பொறுப்பு தனபால் தலைமையில் உதவி ஆணையர்கள் சிவலிங்கம், செல்வி ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஈடுபட்டிருந்தனர்.
இதில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ராமேசுவரம் கோவில் உண்டியல் வருமானமாக ஒரு கோடியே 16 ஆயிரம் ரூபாயும், மற்றும் தங்கம் 145 கிராம், வெள்ளி ஒரு கிலோ 931 கிராம் இருப்பதும் தெரியவந்தது. கொரோனா ஊரடங்கிற்கு பின் ராமேசுவரம் கோவில் திறந்து முதல் முறையாக தற்போதுதான் உண்டியல் வருமானம் மிக அதிகமாக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.