தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு -நாளை முதல் அமல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கொரோனா பரவல் 1.6 சதவீதமாக இருந்தது. ஒரே மாதத்தில் 8 சதவீதம் உயர்ந்து கொரோனா பரவல் 9.6 சதவீதம் ஆனது. சென்னையை பொறுத்தமட்டில் கொரோனா பரவல் 16 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்-அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த 20-ம் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.