ஜனாதிபதி ஜோ பைடனுடன் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா நேரடி பேச்சுவார்த்தை
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு பிறகு வெளிநாட்டு் தலைவர் ஒருவர் உடன் நடந்த முதல் நேருக்கு நேர் சந்திப்பு இதுவாகும்.
இந்த சந்திப்பின்போது இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்தும், பிராந்திய நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை உறுதி செய்ய இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் கொரோனா வைரஸ், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்தும், வடகொரியா முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்வது பற்றியும் இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர். நீண்ட நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பிறகு ஜோ பைடன் மற்றும் யோஷிஹைட் சுகா ஆகிய இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஜோ பைடன் பேசுகையில், “இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கும், உலகுக்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் அடித்தளமாக எங்கள் கூட்டணி தனது பங்கை வழங்கியுள்ளது. தற்போதைய பிராந்திய நிலைமை மற்றும் கடுமையான பாதுகாப்பு சூழலின் வெளிச்சத்தில், எங்கள் கூட்டணியின் முக்கியத்துவம் புதிய உயரங்களை எட்டியுள்ளது” என்றார்.
மேலும் அவர், “ஜப்பானும், அமெரிக்காவும் உறுதியான முயற்சிகள் மூலம் பார்வையை மேம்படுத்துவதற்கு முன்னிலை வகிக்கும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆசியான், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும், பிராந்தியங்களுக்கும் நாங்கள் ஒத்துழைப்போம்” என கூறினார்.
அதனை தொடர்ந்து யோஷிஹைட் சுகா பேசுகையில், “இந்தோ-பசிபிக் மற்றும் உலகின் அமைதி மற்றும் செழிப்பில் சீனாவின் செல்வாக்கு குறித்தும் நாங்கள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினோம். கிழக்கு மற்றும் தென் சீன கடல்களிலும், பிராந்தியத்திலும் மற்றவர்களை அச்சுறுத்துவதன் மூலம் நிலைமையை மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் எதிர்க்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என தெரிவித்தார்.
மேலும் அவர், “ஒரு சுதந்திரமான, வெளிப்படையான அணுகக்கூடிய மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் குவாட் அமைப்பை வலுவாக்கி நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்றார்.