கும்பமேளா பெயரளவுக்கு நடத்துவதே சரி - பிரதமர் மோடி
உத்தரகாண்டின் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் கும்பமேளா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கும்பமேளா இந்த ஆண்டு நடந்து வருகிறது.
கொரோனா காரணமாக இந்த ஆண்டு கும்பமேளாவின் கால அளவு வெறும் ஒரு மாதமாக குறைக்கப்பட்டதுடன், பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. குறிப்பாக தொற்று இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம், சமூக இடைவெளி, முககவசம் போன்ற விதிமுறைகள் பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆனால் 670 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் கும்பமேளா தலங்களில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்களால் இந்த விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறந்து விட்டன. எந்தவித விழிப்புணர்வோ, தொற்று குறித்த அச்சமோ இன்றி பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
இதனை அடுத்து ஏப்ரல் 30ஆம் தேதி வரை கும்பமேளா நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கும்பமேளாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கும், சாதுகளுக்கும் கொரோனா பரவி வருவதால் அதிக அளவில் பக்தர்கள் கூடாமல் பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.