ஐ.பி.எல். ஒளிபரப்பு மூலம் ரூ.3,800 கோடி வருமானம்
உலகில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் அதிகளவில் வருமானம் கொட்டுவது ஐ.பி.எல். போட்டியில்தான். இதில் விளம்பரம் மற்றும் ஒளிபரப்பு மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டுகின்றன. தற்போது 14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமையை பெற்றுள்ளது. 2018-ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுக்கு ஒளிபரப்பு செய்ய ரூ.16,347.5 கோடிக்கு கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்புவதன் மூலம் ரூ.3,600 கோடி முதல் ரூ.3,800 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.
அந்த நிறுவனம் 10 வினாடிக்கு விளம்பர கட்டணமாக ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை பெறுகிறது. இது கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியை விட 14 முதல் 15 சதவீதம் அதிகமாகும்.
ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்கிறது. இந்த போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விளம்பரங்கள் வழியாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கின்றன.