அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
அரச நிறுவனங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் தொலைபெசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் செயன்முறையை வினைத்திறனுடன் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் தமது வேலைகளை நிறைவு செய்து கொள்வதற்காக பாரிய சிரமங்களுக்கு மத்தியில் நேரம் மற்றும் பணத்தை செலவழித்து அரச நிறுவனங்களுக்கு வருகின்றனர். இதற்குப் பதிலாக, அந்நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு உடனடி பதிலை வழங்கும் வினைத்திறனான செயன்முறையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் வழங்கியுள்ள ஆலோசனைப்படி, அரச நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள்,மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பது தொடர்பான விதிமுறைகள் அடங்கிய, பொதுநிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடனான விசேடக் கடிதம், அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் சாதாரணக் கடிதங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கவும் இதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, உடனடி பதில் வழங்க முடியாத சந்தர்ப்பங்களில், குறைந்தபட்சம் ஒரு வாரத்தினுள் இடைக்கால பதில் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நான்கு (04) வாரங்களுக்குள் இதற்கான இறுதி பதிலை அனுப்புவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.