ஸ்டாலின் தனது பேச்சில், செயலில் முதல்வராக நடந்துகொண்டார் - அண்ணாமலை
திமுக எதிர்கட்சியாக இருந்த சமயத்தில் பிரதமர் மோடி தமிழகம் வரும்போது எதிர்ப்பு நடவடிக்கைகளில் முன்னிலையில் நிற்கும். தற்போது ஆளுங்கட்சியாக உள்ள நிலையில் மோடிக்கு யாரும் எதிர்ப்பு தெரிவித்துவிடக்கூடாது என கவனமாக இருக்கிறது.
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பகிர்பவர்கள் கண்காணிக்கப்படுவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெரியாரிய அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள் தமிழகத்தில் மோடி எதிர்ப்பில் உறுதியாக உள்ளன.
மாநில அரசு, ஒன்றிய அரசை அனைத்து நேரங்களிலும் எதிர்க்க முடியாது, தமிழகத்துக்கு தேவையான நிதியை கேட்டுப் பெறவேண்டுமானால் நெளிவு சுழிவோடு நடந்துகொள்ள வேண்டும் என அந்தப் பக்கத்திலிருந்து காரணம் சொல்லப்படுகிறது.செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக தமிழக அரசை பிரதமர் மோடியும், அண்ணாமலையும் பாராட்டி பேசியுள்ளது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது. செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இந்தியாவின் கலாச்சாரத்தை, பெருமையை பறைசாற்றும் விதமாக தமிழக அரசு பயன்படுத்திக்கொண்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி ஓய்வெடுக்க சென்றார். அவரை ஆளுநர் புத்தகம் கொடுத்து வரவேற்றார். அங்கு பிரதமர் மோடி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "பாஜகவின் மூத்த நிர்வாகிகள், ஜன சங்கம் காலம் தொட்டு பணியாற்றி வருபவர்கள் இங்கே வந்து பிரதமரை சந்தித்தனர். இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை. அரசியல் பேசுவதற்கு தற்போது தமிழகத்தில் தேர்தல் எதுவும் நடக்கவில்லை. தகுந்த நேரங்கள் வரும்போது நிச்சயமாக அரசியல் பேசுவோம்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பிரதமருடன் இணக்கம் காண்பித்ததை தொடர்ந்து திமுக - பாஜக கூட்டணிக்கு வாய்ப்புண்டா என்ற கேள்வி அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பாஜக ஒரு கொள்கை ரீதியான கட்சி. தன்னுடைய கொள்கையை பாஜக எப்போதும் மாற்றிக்கொள்ளாது. கடந்தமுறை பிரதமர் சென்னை வந்தபோது நடந்த சம்பவங்களை வைத்து முதல்வர் பெரிய மனதோடு நடந்துகொண்டிருக்க வேண்டும். அரசு விழா என்பது அரசியல் பேசுவதற்கான களம் கிடையாது என்று நானே ஊடகங்களிடம் பேசினேன். ஆனால், இப்போது நான் முதல்வரை பாராட்டுகிறேன். செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியை இந்தியாவின் கலாச்சாரத்தை, பெருமையை பறைசாற்றும் விதமாக தமிழக அரசு பயன்படுத்திக்கொண்டது.
முதல்வரின் நடத்தைக்கு எங்களின் பாராட்டுக்கள். அதனால் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தமிழக பாஜகவின் தனிப்பட்ட பாராட்டுக்கள். என்றாலும் ஒரு நிகழ்ச்சியை நன்றாக செய்துள்ளார்கள் என்பதை பாராட்டியதற்காக கூட்டணி என்றெல்லாம் கிடையாது. கூட்டணி என்ற பேச்சே இல்லை. முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில், செயலில் முதல்வராக நடந்துகொண்டார். ஒரு தமிழனாக நாம் பெருமைப்பட்டோம் என்று பதிலளித்தார்.