மதுரையில் டாக்டராகும் ஆசையில் நீட் தேர்வு எழுதிய 56 வயது விவசாயி
மதுரை மாடக்குளம், சக்தி நரை சேர்ந்தவர் ராஜ்யக்கொடி (வயது 56) விவசாயி. இவருக்கு மனைவி தேன்மொழி, மகன்கள் சக்திபெருமாள், வாசுதேவா உள்ளனர். சக்தி பெருமாள், காண்ட்ராக்டராக உள்ளார். 2-வது மகன் வாசுதேவா, கடலூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
விவசாயி ராஜ்யக் கொடிக்கு டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக 1986-ம் ஆண்டு நுழைவுத் தேர்வு எழுதினார். இதில் அவருக்கு தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. அங்கு கல்விக் கட்டணம் செலுத்த, பணம் இல்லை. எனவே ராஜ்யக்கொடியால் மருத்துவ கல்லூரியில் சேர முடியவில்லை. இருந்தபோதிலும் அவருக்கு டாக்டராக வேண்டும் என்பது கனவாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் ராஜ்யக்கொடி நடப்பாண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தார். அவருக்கு ஹால் டிக்கெட் வந்து சேர்ந்தது. அவர், ஹால் டிக்கெட்டுடன் மதுரை அனுப்பானடி ரிங்ரோட்டில் உள்ள வேலம்மாள் நீட் தேர்வு மையத்துக்கு இன்று காலை வந்தார். அவரது ஹால் டிக்கெட்டை சரிபார்த்த அதிகாரிகள், தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து ராஜ்யக்கொடி, நீட்தேர்வு எழுதினார்.