
வடக்கு நீலங்களின் சமர் போட்டியில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி
வடக்கு நீலங்களின் சமர் போட்டியில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணி துடுப்பெடுத்தாடியது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி வெற்றிபெற்று களத்தடுப்பை தெரிவு செய்யது.போட்டிக்கு தயாரான இரு அணியினரையும் விருந்தினர்கள் கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து குழுப்படம் எடுக்கப்பட்டதை அடுத்த போட்டி ஆரம்பமானது.பார்வையாளர்களின் வரவேற்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக ஆரம்பமான குறித்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் 50.2 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 181 ஓட்டங்களைப் பெற்று அனைத்து இலக்குகளையும் இழந்தனர்.
துடுப்பாட்டத்தில் மத்திய மகாவித்தியாலயம் சார்பில் தஜீபன் 41 (48 பந்துகளில்) பாவலன் 27(125 பந்துகள்)பந்து வீச்சில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி சார்பில் தமிழ்ப்பிரியன் 4 இலக்குகளையும் ஹரிசாந் 3 இலக்குகளையும் பெற்றனர்.
பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி முந்தைய நாள் ஆட்டம் இடை நிறுத்தப்படும் வரை 32 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 4 இலக்குகளை இழந்து 94 ஓட்டங்களை பெற்ற நிலையில் முதல்நாள் ஆட்டம் நிறைவடைந்தது. இரண்டாம் நாளான நேற்று தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 52.5 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 140 ஓட்டங்களைப் பெற்று அனைத்து இலக்குகளையும் இழந்தனர்.
துடுப்பாட்டத்தில் இந்துக் கல்லூரி அணி சார்பில் பகலவன் 38 ஓட்டங்களையும் கிருசாந்தன் 34 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றனர்பந்து வீச்சில் அபிராஜ் மற்றும் பிரதாப் ஆகியோர் தலா 3 இலக்குகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு தமது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மத்திய மகாவித்தியாலய அணியினர் 26.5 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 158 ஓட்டங்களுக்கு 8 இலக்குகளை இழந்திருந்த வேளை தமது ஆட்டத்தை இடைநிறுத்துவதாகக்கூறி 200 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயத்திருந்தனர்.
200 என்னும் வெற்றி இலக்கு நோக்கி துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி 36 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 108 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.சிறந்த துடுப்பாட்ட வீரனாக மத்திய மகாவித்தியாலய அணியின் பாவலனும், சிறந்த பந்துவீச்சாளராக கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணியின் தமிழ்ப்பிரியனும், சகலதுறை வீரர் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணியின் பிரதாப் தெரிவானதுடன், போட்டியின் ஆட்ட நாயாக கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணியின் கிரிசாந்தன் தெரிவாகினர்.