
கிளிநொச்சி அக்கராயன் கமநல சேவை நிலையத்தில் கையிருப்பில் இருந்த ஆயிரத்து 500 கிலோ யுரியா மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஊடாகவே முறைகேடாக பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அக்கராயன் குளம் கமநல சேவைக் குழுவின் தலைவர் ம. புவனேந்திரன் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(08-06-2022) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில Zoom தொழில்நுட்பம் மூலமும் நேரடியாகவும் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விவசாய அமைப்புக்களின் பிரதிநிதி அக்கராயன் கமநல சேவை நிலையத்திலிருந்து உரம் கொண்டு செல்லப்பட்டமை தொடர்பில் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இந்த விடயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் உங்களுக்குத் தேவையான உரத்தை நாங்கள் தருகிறோம் இந்த விடத்தை பெரிது படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் அக்கராயன் குளம் கமநல சேவைக் குழுவின் தலைவர் பகிரங்கமாக குறித்த குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பாக மாவட்ட உதவி ஆணையாளர் அவர்களை தொடர்பு கொள்ள பல தடவை முற்பட்ட போதும் பதிலளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கமநல சேவை நிலையங்களில் இரசாயன உரவிநியோகம் நிறுத்தப்பட்டதன் பின்னர் கையிருப்பில் இருந்த சுமார் 63 மெட்ரிக் தொன் இரசாயன உரம் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரின் துணையுடனே இவ்வாறு மாயமாகி இருப்பதாக பல்வேறு தரப்புகளும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் இரசாயன உர பயன்பாட்டை நிறுத்தி சேதன உரத்தை பயன்படுத்தும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது இதனையடுத்து இரசாயன உரம் வினியோகம் கிளிநொச்சி மாவட்ட கமநல சேவைகள் நிலையங்களுடாக நிறுத்தப்பட்டன.
இதன் பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் சுமார் 63 மெற்றிக் தொன் இரசாயன உரம் கையிருப்பில் இருப்பதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டது.
அதாவது 16.25 மெட்ரிக் டன் யூரியா 23.45 மெற்றிக்தொன் ரீ எஸ் பி 23.21 மெற்றிக் தொன் எம்.ஓ.பிஆகியன முழங்காவில் அக்கராயன் இராமநாதபுரம் கிளிநொச்சி புளியம்பொக்கனை ஆகிய கமநல சேவை நிலையங்களில் கையிருப்பில் இருந்தன.
இவ்வாறு கையிருப்பில் இருந்த இரசாயன உரம் இப்பொழுது மாயமாகி உள்ளன அக்கராயன் கமநல சேவை நிலையத்திலிருந்த 30 அந்த யூரியா உரத்தை கொண்டு சென்றமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று முன்தினம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.