ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி உலக சாதனை
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைக் குவித்த அணி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.
மெக்லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலாவது ஆட்டம் மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 48.5 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலெடுத்தாடிய ஆஸ்திரேலியா 38.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 215 ஓட்டங்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி தொடர்ச்சியாக பெற்ற 22-வது வெற்றி இதுவாகும். 2018ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்திய மகளிர் அணிக்கு எதிராக (3-0) வெற்றி. அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வெற்றி. தொடர்ந்து நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (3-0), மேற்கிந்தியத் தீவுகள் (3-0), இலங்கை (3-0) அணிகளுக்கு எதிராக வெற்றிபெற்றது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளில் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.
ஒரு நாள் போட்டி வரலாற்றில் இது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு ரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆண்கள் அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 21 ஆட்டங்களில் (2003-ம் ஆண்டு) வென்றதே உலக சாதனையாக இருந்தது.
18 ஆண்டுகால அச்சாதனையை அந்த நாட்டு பெண்கள் அணி முறியடித்திருக்கிறது.