ஊழியர்களோடு போராட்டத்தில் இறங்கிய சீமான்
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில்,
சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் கடத்திவரும் திமுக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களுக்கு உயிர் காக்கும் நல்ல குடிநீர் வழங்குவதற்கான பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள், அடிப்படை உரிமைகள் கேட்டு வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியிருப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது.
தங்களின் நியாயமான உரிமைகளை வழங்க வேண்டி, அங்குப் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், போராடும் ஊழியர்களைக் காவல்துறை மற்றும் குடிநீர் வாரிய நிர்வாகத்தின் மூலம் மிரட்டி அச்சுறுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இது முழுக்க முழுக்கத் தூய்மை தொழிலாளர்களுக்குத் திமுக அரசு செய்யும் பச்சைத் துரோகமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாகச் சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் தற்காலிக பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதோடு, அவர்களுக்கு உரிய ஊதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.