
பல மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட அனிஞ்சியன்குளம் கிராமத்திற்கான பிரதான வீதி முற்றாக சேதமடைந்து போக்குவரத்து செய்யமுடியாத நிலை காணப்படுவதுடன் பொதுமக்கள் சிரமங்களை எதிர் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மல்லாவி அனிஞ்சியன்குளம் கிராமத்திற்கான பிரதான வீதி அண்மையில் பல மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ள போதும் அதனை உரிய முறையில் புனரமைக்கவில்லையென்றும் இதனால் குறித்த வீதி முற்றாக சேதமடைந்து போக்குவரத்து செய்யமுடியாத நிலையில் காணப்படுவதுடன் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் சிரமங்களை எதிர் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அனிஞ்சியன் குளம் கிராமத்திற்குச் செல்லும் குறித்த வீதியானது அண்மையில் பல மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக விடப்பட்டது.
இந்த நிலையில் குறித்த வீதி சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதுடன் மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இருநுாறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ் வீதியைப்பயன்படுத்தி வருவதுடன் நூற்றுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களும் இந்த வீதியை பயன்படுத்தி வரும் நிலையில் இவ்வாறு சேதமடைந்து காணப்படுகின்றது.
இதனால் தாங்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பாக இந்தப் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் முதியோர்கள் கற்பவதிகள் என பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.