
கோரக்கன் கட்டுப்பகுதியில் சிறு போக செய்கை தொடர்பான கலந்துரையாடல்கள் எதுவும் நடத்தப்படவில்லை பற்றுச் சீட்டுக்கள் இன்றி எந்த ஒரு பணமும் அறவிட முடியாது என பரந்தன் கமநல சேவை
கிளிநொச்சி பரந்தன் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட கோரக்கன் கட்டுப்பகுதியில் இவ்வாண்டுக்கான சிறு போக செய்கை தொடர்பான கலந்துரையாடல்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்பதுடன் பற்றுச் சீட்டுக்கள் இன்றி எந்த ஒரு பணமும் அறவிட முடியாது என பரந்தன் கமநல சேவைநிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பரந்தன் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட கோரக்கன் கட்டுப்பகுதியில் அப்பகுதி கமக்கார அமைப்பினால் எந்த வித பயிர் செய்கை கூட்டங்களும் நடத்தப்படாது சிறு போக செய்கைக்கான வாய்க்கால் அமைப்பிற்கென ஒவ்வெரு விவசாயிகளிடமிருந்தும் மிக அவசரமாக தலா இரண்டாயிரத்து ஐநுாறு ரூபா வீதம் பற்றுச் சீட்டுக்கள் எதுவுமின்றி அறவிடப்பட்டுள்ளதாக குறித்த பிரதேச விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் உள்ள நீர் பாசன பிரதேசத்துக்குள் உள்வாங்கப்படாத குறிப்பிட்ட அளவு காணிகளை இம்முறை பரீட்சார்த்தமாக உள்வாங்கி விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்வது என்று அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கமைவாக குறித்த பிரதேசத்தில் நீர்ப் பாசனக் கட்டுமானங்கள் வாய்க்கால்கள் இல்லாத காரணத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயிர் செய்கை மேற்கொள்வதாக மாவட்ட அரச அதிபர் தலைமையில் இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பில் இதுவரை பிரதேச மட்டத்தில் பயிர்செய்கை கூட்டங்கள் எதும் நடத்தப்படாது 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு கோரக்கன் கட்டுப்பகுதியில் செய்கைக்கு உட்படுத்தப்ட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகிய வற்றின் எந்தவித அனுமதிகளுமின்றி வாய்க்கால் அமைப்பதற்கென ஒவ்வொரு விவசாயிகளிடமிருந்தும் தலா 2,500 ரூபா வீதம் அறவிடப்பட்டிருப்பதாக விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தெடர்பில் பரந்தன் கமநல சேவைநிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு கேட்டபோது கோரக்கன் கட்டுப்பகுதியில் இவ்வாண்டுக்கான சிறு போக செய்கை தொடர்பான கலந்துரையாடல்கள் எதுவும் நடத்தப்படவில்லை. எந்த தீர்மாணங்களுமின்றி பற்றுச் சீட்டுகள் இல்லாது விவசாயிகளிடமிருந்து பணம் அறவிட பட்டிருந்தால் அது ஒரு சட்டவிரோதமான செயற்பாடாகும் இது தொடர்பாக விவசாயிகள் முறைப்பாடு தெரிவிக்கும் இடத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தாங்கள் தயார் என்றும் தெரிவித்துள்ள அவர் குறித்த பிரதேசத்தில் சிறு போக செய்கை மேற் கொள்வதற்கான எந்த தகவல்களும் எங்களுக்கு உத்தியோக புரவமாக கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைக்கும் போது தான் மானிய கொடுப்பனவுகள் பயிர் காப்புறுதிகள் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பில் விவசாயிகளுடன் பிரதேச மட்ட கலந்துரையால்களை நடத்தி தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.