கிளிநொச்சி மாவட்டத்தின் கனகபுரம் தொடக்கம் கணேசபுரம் வரையிலான நகர்ப்பகுதிகளில் மழைகாரணமாக ஏற்படுகின்ற வெள்ள பாதிப்புகளை முகாமை செய்வதற்கான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் நகர்ப்பகுதிகளில் வெள்ள பாதிப்பு நிலைமைகள் அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டன.
வருடம்தோறும் மழை வீழ்ச்சியின் காரணமாக கிராமங்களில் பொதுமக்கள் எதிர்கொள்கின்ற வெள்ள பாதிப்பிற்கான தீர்வுகள் மற்றும் பாதிப்புக்கு உள்ளான தனிநபர்களது முறைப்பாடுகளுக்கு அமைய தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அந்த வகையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிலைமைகளை ஆராயும் வகையில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்,நீர்ப்பாசன பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டகிளிநொச்சி மேற்கு பகுதியில் கனகபுரம் முதல் கணேசபுரம் வரையிலான பகுதிகள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகின்ற நிலமைகள் அவதானிக்கப்பட்டன.
வெள்ளம் வழிந்தோடக்கூடியவகையில் செயற்பாடுகளை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் போதுதான் வெள்ள நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவே எல்லோரும் இணங்க கூடியதான பொதுவான முடிவு ஒன்றினை பெற்றுக்கொள்வது பொருத்தமானது என தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தனிப்பட்ட நபர்கள் பாதிக்காத வகையிலும் பொதுவான முறையில் கால்வாய்கள்,வடிகால்களை அமைப்பதன் ஊடாக வெள்ளம் வழிந்தோடும் கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இக்கலந்துரையாடலில் மாவட்ட செயலக அதிகாரிகள்,பிரதேச சபை தவிசாளர்,கரைச்சி பிரதேச செயலாளர்,உதவி திட்ட பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்,நில அளவை அத்தியட்சகர்,நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்,கிராம அலுவலர்கள்,கிராமங்களின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.