முல்லைத்தீவு மாந்தை கிழக்கு சமுர்த்தி வங்கியில் ஒரே கூரையின் கீழ் சேவைகளை வழங்கும் ONE STOP SHOP ஆரம்ப நிகழ்வு வலய உதவியாளர் ம. சசிகுமார் தலைமையில் (26-04-2022)மதியம் 1.00மணிக்கு சிறப்புற நடைபெற்றது.
2022ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் சமுர்த்தி திணைக்களத்தின் பரிமாற்ற வளர்ச்சியாக சமுர்த்தி பயனாளிகளை பொருளாதார ரீதியில் வலுவூட்டும் நோக்கில் பல்தரப்பட்ட ஆலோசனைகளை வழங்கும் நிலையமாக இது செயற்படும்.
இதன் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்து சமுர்த்தி வங்கிகள் மற்றும் ஆறு சமுர்த்தி சமுதாய அடிப்படை சங்கங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.இந் நிகழ்வில் பிரதம விருந்த்தினர்களாக முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம். முபாரக் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ந.ரஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மாந்தைகிழக்கு ONE STOP SHOP அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் விசாலினி கோபிதாஸ் மற்றும் விருந்தினர்களால் நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.மேலும் ஆரம்ப நிகழ்வாக இரு சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார அபிவிருத்தி கடனாக தலா ஒரு இலட்சம் ரூபா விவசாய நடவடிக்கைக்காக விருந்தினர்களால் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சமூக மட்ட தலைவர்களுக்கு அதிதிகளால் விளக்கமளிக்கும் நிகழ்வு சமுர்த்தி வங்கி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் யோகேந்திரன், முல்லைத்தீவு மாவட்ட வங்கிகளுக்கான முகாமையாளரும் மாந்தை கிழக்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளருமான மு.ஜெஸ்லி, சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் வி.கலைவதனி, மாந்தைகிழக்கு பிரதேச அமைப்பின் தலைவர் வை.ஜெயரூபன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளின் நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.