
முல்லைத்தீவு மல்லாவி பிரதேசத்தில் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் அம்மாச்சி உணவகத்தில் பணியாற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேசத்தில் விவசாய திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற அம்மாச்சி உணவகத்தில் 09 வரையான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொழில் வாய்ப்பை பெற்று தமது குடும்ப பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று அம்மாச்சி உணவகத்திற்கான மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றைப் பெற்றுக் கொள்வதில் தொடர்ந்தும் நெருக்கடி நிலை காணப்படுவதாகவும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு பெற்றுக்கொள்ள முடியாத நிலையில்; தங்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்கள் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் இதனால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மேற்படி உணவகத்தில் பணியாற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
ஏனைய மாவட்டங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அல்லது சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில் மண்ணென்னை மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தாலும் குறித்த பிரதேசத்தில் ஒரேயொரு எரிபொருள் நிலையம் மாத்திரமே இருப்பதாகவும் அதிலும் மண்ணென்னையை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உணவு தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.