பாலியல் புகாரில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் சிறையிலடைப்பு
வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்த பின்னர் தாலிகட்டி அப்பெண்ணை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த பிரபல ஜவுளிக்கடை நிறுவனமான ஸ்ரீ கணபதி சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரபல ஜவுளி கடை நிறுவனம் ஸ்ரீ கணபதி சில்க்ஸ். கோவை, சங்கரன்கோவில், மதுரை, வத்தலகுண்டு ஆகிய பகுதிகளில் நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளன. தேனி - மதுரை சாலையில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதன் உரிமையாளர் முருகன்.
தேனியில் இயங்கி வருகின்ற இந்த ஜவுளிக்கடை கட்டிடத்தில் டிசைனர் ஸ்டூடியோ- அழகு சாதன பொருட்கள் விற்பனை அகத்தின் 29 வயது பெண் உரிமையாளர் ஒருவர் முருகன் மீது தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முருகன் தன்னிடம் நட்பு ரீதியாக பழகி வந்தார். அதன் பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொன்னார். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் நான் மறுத்தேன். ஆனால் வலுக்கட்டாயமாக என்னை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்துவிட்டார். அதன் பின்னர் நான் வற்புறுத்தியதால், கடந்த மார்ச் மாதம் 8ம்தேதி தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள அவரது மேலாளர் வினோத் வீட்டில் வைத்து தாலி கட்டினார்.
இதையத்து பெற்றோர் வற்புறுத்துகிறார்கள் என்று சொல்லி, சின்னமனூர் ஊரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார் என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். 40 நாட்களுக்குப் பின்னர் நேற்று தேனி காவல்துறையினரிடம் சரணடைந்ததை அடுத்து தேனி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.