தமிழகதில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரொனா பாதிப்புகள் சற்று உயர்ந்துள்ளன. இதுகுறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அதில் ”டெல்லியில் கடந்த 4ம் தேதி 82 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 632 ஆக உயர்ந்துள்ளது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா பாதிப்புகள் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க கொரோனா தொற்று மாற்றம் எதுவும் இல்லை என்றாலும் 25-க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 30 ஆக உயர்ந்துள்ளது. 8 மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா வைரஸை முற்றிலும் தடுக்க வேண்டுமானால் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் இன்னமும் 40 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். 1.37 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பாளர்கள் மருத்துவமனைகளில் இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக உபகரணங்கள், மருத்துவ பொருட்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களை கண்காணித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.