திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அன்றைய தினம் அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சென்று சாமி தரிசனம் செய்து கிரிவலம் செல்வது வாழ்வில் பல நல்ல பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது. மேலும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர்கள் ஆசியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்துக்கு அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி இன்று அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்னதாகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் செல்ல தொடங்கிவிட்டனர். 2 ஆண்டுக்கு பின்னர் சித்ரா பவுர்ணமி விழா களை கட்டி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் வியாபாரமும் களை கட்டியுள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.