80% பணியிடங்களை தமிழர்களுக்கு வழங்க சட்டம் வேண்டும் - சீமான்
போலிச்சான்றிதழ் மூலம் தமிழர்களது வேலைவாய்ப்புகளைப் பறித்து மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல்.
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசுப் பணியிடங்களில் போலிச்சான்றிதழ் கொடுத்து 300க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் வேலைக்குச் சேர்ந்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. முறைகேடான வழிகளில் தமிழர்களது வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து பறித்துவரும் வடமாநிலத்தவர்களின் மேலாதிக்கத்தைத் தடுக்கத்தவறி கைகட்டி வேடிக்கை பார்க்கும் திராவிட அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
போலிச்சான்றிதழ் கொடுத்து ஒன்றிய அரசுப் பணியில் சேர்ந்த 300 வடமாநிலத்தவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், நிகழ்ந்துள்ள இம்முறைகேடு குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு முறைகேட்டில் தொடர்புடைய அனைவருக்கும் சட்டத்தின் மூலம் உரிய தண்டனைக் கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன் என்றும் சீமான் கூறியுள்ளார்.