
முல்லைத்தீவு மாவட்டத்தில் சென்றாண்டுக்கான தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு கரையோர தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் இன்று(04-04-2022) நாயாறு கடற்கரையில் நடைபெற்றுள்ளது
சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினமானது வருடா வருடம் செப்டெம்பர் மாதம் 15ம் திகதி முதல் 22ம் திகதி வரை தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரமாக நாட்டின் கரையோர பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
2021ம் ஆண்டுக்கான தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரம் கொரோனா பேரிடர் காரணமாக இடம்பெறவில்லை.இந் நிலையில் மாவட்ட செயலக தேசிய கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சென்றாண்டுக்கான தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு கரையோர தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் இன்று(04) காலை 08.00மணிக்கு நாயாறு கடற்கரையில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் நாயாறு தொடக்கம் செம்மலை வரையிலான ஐந்து கிலோமீட்டர் தூரமான கடற்கரை பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதனூடாக எதிர்கால சந்ததியினருக்கு கடற்கரையோர பாதுகாப்பு மற்றும் சுத்தப்படுத்தும் அவசியத்தை வலியுறுத்துவதுடன் நீர் மாசடைதலை தடுப்பதே நோக்கமாகும்.மேலும் இதன்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன், கண்ணாடிகள், ஏனையவை என மூன்று பகுதிகளாக தரம்பிரிக்கப்பட்டு பெருந்திரளான திண்மக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
இச் சிரமதான நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், இராணுவ உயரதிகாரிகளான Major General g.d. sooriyabandara (Commander-in-Chief,59 Infantry Regiment), Brigadier h.t.w. widyananda (Brigade commander, 593 Infantry brigade, Nayaru), M.p.w. kumara, (Lieutenant Commander, Sri lanka navy, Gotabaya navy Camp, Mullaitivu), கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், கடற்றொழில் சமாச உறுப்பினர்கள், கடற்றொழில் சார் சமூகத்தினர், இராணுவத்தினர், கடற்படையினர், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.